பிரச்சினைகளை எதிர்த்து வெற்றி கொள்ளக்கூடிய மாணவர் சமுதாயத்தை பாடசாலை அதிபர்கள் உருவாக்க வேண்டும். பெற்றோர்களுக்கும் இது தொடர்பான பொறுப்பு உள்ளது என்று உயர் கல்வி பிரதி அமைச்சர் சுதர்சனி பெர்னாந்து புள்ளே தெரிவித்தார்.
நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய ஜெயராஜ் பெர்னாந்து புள்ளே மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற கட்டானை கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதி அமைச்சர் சுதர்சனி பெர்னாந்து புள்ளே மேற்சொன்னவாறு கூறினார்.
அதற்கு முன்னதாக பிரதி அமைச்சர் கிம்புலாபிட்டிய ஜெயராஜ் பெர்னாந்து புள்ளே மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
அதன்பின்னர் கட்டானை கல்விக் கோட்டத்தால் நடத்தப்பட்ட அதிபர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
நான் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு ஜெயராஜ் பெர்னாந்து புள்ளே மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வாகும். அதேபோன்று, கட்டானை கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த அதிபர்கள் முன்னிலையில் உரையாற்றக்கிடைத்தமையும் மகிழ்ச்சியைத் தருகிறது.
கட்டானை பிரதேசத்திலிருந்து வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது. இது எமது கோட்டத்தின் கல்வியில் ஏற்பட்டு வரும் அபிவிருத்தியை எடுத்துக் காட்டுகிறது. கட்டனையில் சில பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை அந்தப்பாடசாலைகளில் அதிகரித்துள்ளது. விரைவில் இப்பிரதேச பாடசாலை அதிபர்களை சந்திக்கவுள்ளேன் என்றார்.
நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்