நமது சமூகத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே தமிழ் பேசுபவர்கள்; அரச உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்கள் அரச உயர் பதவிகளை பரீட்சைகள் மூலம் அடைய முயற்சி செய்ய வேண்டும். அதற்காக இலங்கை கல்வி நிருவாக சேவை, நிருவாக சேவை போன்ற உயர் பரீட்சைகளை எழுதி சித்தி அடைய வேண்டும் என்று இராஜாங்க கல்வி அமைச்சர் வி.எஸ். இராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை (26-3-2015) அன்று கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரு அமர்வுகளாக இடம்பெற்றது. இரண்டாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
காலை அமர்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையிலும் மாலை அமர்வு இராஜாங்க கல்வி அமைச்சர் வி.எஸ்;.இராதா கிருஷ்ணன் தலைமையிலும் இடம் பெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் கல்வி முதுதத்துவமாணி, கல்வி முதுமாணி, கல்வி முகாமைத்துவ விஞ்ஞான முதுமாணி, கல்வி முகாமைத்துவ கல்விமாணி, கல்வி மாணி ஆகிய உயர் பாடப்படிப்பு பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 1230 பேர் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
இராஜாங்க கல்வி அமைச்சர் வி.எஸ்;. இராதா கிருஷ்ணன் உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
கல்வியை கற்பித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே நீங்கள் கற்றுக் கொண்டு இன்று பட்டங்களை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இது வரவேற்கத்தக்கது. இந்தப் பட்டங்கள் மூலம் நீங்கள் பதவி உயர்வு பெறுவீர்கள்.
பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறுவதாக இருந்தால் அதிகளவு பணம் செலவிட வேண்டும். காலத்தை ஒதுக்க வேண்டும்.ஆனால் இவ்வாறு தொழில் செய்து கொண்டு பட்டம் பெறுவது பலவழிகளிலும் உங்களுக்கு நன்மை பயக்கிறது.
இன்று நீங்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவதற்கான இன்னொரு தகுதியை பெற்றிருக்கின்றீர்கள். தமிழில் இது போன்ற நிகழ்வொன்றில் தமிழ் மொழி மூலம் பேசக்கூடிய தமிழர் ஒருவரை அமைச்சராக பெற்றிருக்கிறீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் கூறவிரும்புகிறேன்.
ஒரு சமூகத்தில் கல்வி கற்றவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து உண்டு. அந்த தகைமை உங்களுக்கும் உண்டு. கல்வி கற்று உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் பிழையான கருத்தை முன்வைப்பது பிரச்சினைக்குரிய விடயமாக ஆகிவிடும்.
கல்வித்துறையில் உள்ள நீங்கள் மேலும் மேலும் கல்வி கற்க வேண்டும். சந்தர்ப்பங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நமது சமூகத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே தமிழ் பேசுபவர்கள் அரச உயர்அதிகாரிகளாக இருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்கள் அரச உயர் பதவிகளை பரீட்சைகள் மூலம் அடைய முயற்சி செய்ய வேண்டும். அதற்காக இலங்கை கல்வி நிருவாக சேவை, நிருவாக சேவை போன்ற உயர் பரீட்சைகளை எழுதி சித்தி அடைய வேண்டும் என்றார்.
இந்த பட்டமளிப்பு விழா நிகழ்வில் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் (பதில் கடைமை) எஸ்.யூ.விஜயரத்ன, யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் தகைசார் ஓய்வு நிலை பேராசிரியர் எஸ்.பத்மநாதன், களனி பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுவந்த மத்தும பண்டார ஆகியோரால் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தப்பட்டது.
பேராசிரியர் எஸ்.பத்மநாதன் ‘இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகமும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவகத்தின் விரிவுரையாளர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்