நீர்கொழும்பில் 7 நாட்களும் வியாபார நிலையங்கள் திறக்கப்படுவதால் ஊழியர்கள் பாதிப்பு

0
155

நீர்கொழும்பிலுள்ள வியாபார நிலையங்களில் தொழில் புரியும் அநேகமான ஊழியர்களுக்கு கிழமையில் ஏழு நாட்களும் வேலை செய்ய நேர்ந்துள்ளதாக ஊழியர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். ஒரு சில கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறக்கப்படுவதால் தமது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அது  பெரும் தாக்கத்தை  ஏற்படுத்தி இருப்பதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நகைக் கடைகள் தொடக்கம் புடவை,, உணவு மற்றும் மின் உபகரணங்கள் போன்ற பெரும்பாலான கடைகள் ஞாயிற்றக் கிழமைகளிலும் திறக்கப்படுகின்றன. இங்கு அநேகமான வியாபார நிலையங்களில் சேவை புரியும் தமிழ் ஊழியர்கள் வெளி மாவட்டங்களிலிருந்து வருகைத் தந்து தங்கியிருக்கன்றனர். அவர்கள் விடுமுறையில் ஊருக்கு செல்வது சிங்கள மற்றும் புதுவருடப் பிறப்பின் போது மட்டும் ஆகும். ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை புரிந்தாலும் விஷேடமான சம்பள உயர்வு எதுவும் வழங்கப்படுவதில்லை என்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகள் திறக்கப்படுகின்றமைக்கான பிரதான காரணம்; வியாபார நிலையமொன்றை ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்காது விட்டால் கடைகளை திறந்து வியாபாரம் நடத்தும் மற்றைய வியாபாரிகள் தமது வாடிக்கையாளர்களை கவர்ந்து விடுவதும், தங்களை பற்றிய  நம்பிக்கை வாடிக்கையாளர்களிடமிருந்து குறைந்து விடுவதுமாகும்  என வர்த்கர்கள் கருதுகின்றனர். இதன்காரணமாக  பல வர்த்தகர்கள் விருப்பமில்லாது விட்டாலும் தமது வியாபார நிலையங்களை திறக்க நேரிடுகிறது.

மற்றைய காரணம் நீர்கொழும்பில் ஞாயிற்றுக் கிழமைகளில் வியாபார நிலையங்களை மூட வேண்டுமென்று நடைமுறையில் இருந்த சட்டம் இந்நகரம் சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் மாற்றப்பட்டமையாகும்.

மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்சாவினால் செய்யப்பட்ட முன்மொழிவின் பிரகாரம் நீர்கொழும்பு நகரம் சுற்றுலா வலயமாக பெயர் குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸாரினால் நடாத்தப்பட்ட விஷேட கலந்துரையாடலில் ஊழியர்கள் தமது பக்க நியாயங்களை தெரிவித்த போதிலும் இந்த சுற்றுலா வலயத்தின் காரணமாக கட்டாயமாக ஞாயிற்றுக் கிழமைகளிலும் வியாபார நிலையங்கள் திறக்கப்பட வேண்டுமென்று உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஊழியர்களின் சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தொழிலாளர் காரியாலயத்தினால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் நீர்கொழும்பு வியாபார சங்கத்தினாலும் இது தொடர்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன் ஊழியர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சங்கத்தினால் அல்லது பெயரினால் அந்தப் பிரச்சினையை முன்வைக்கும் படி சங்கத்தினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீர்கொழும்பிலுள்ள வியாபார நிலையங்களில் தொழில் புரியும் ஊழியர்களுக்கான சங்கம் என்று இது வரை எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையை அளிக்க விரும்புகின்ற வியாபாரிகள் இருக்கின்ற போதிலும் மற்றைய வியாபாரிகள் தமது வர்த்க நிலையங்களை திறப்பதால் அவர்களும் வியாபார நிலையங்களை திறக்க நேரிடுகின்றது என்பது பலரது கருத்தாகும்.

இந்தப் பிரச்சினையை தவிர   அநேகமான தொழில்கொள்வோர் (முதலாளிமார்) தமது ஊழியர்களுக்காக செலுத்த வேண்டிய ஈ.பிஎப். மற்றும் ஈடி.எப். (EPF.  ETF)   பணத்தை செலுத்துவதில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. இது ஊழியர்களின் உரிமை மீறலாகும்.

நீர்கொழும்பு – கொச்சிக்கடை நகரத்தில் உள்ள வியாபார நிலையங்;களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவதுடன் வர்த்தக சங்கமும் மாதத்திற்கு ஒரு முறை கூடுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயினும். நீர்கொழும்பு வர்த்தக சங்கம் நீண்ட இடைவெளியின் பின்னரே கூடுவதாகவும் தெரிய வருகிறது.

எவ்வாறாயினும்,   இவ்விடயம் தொடர்பாக யாராவது தலையிட்டு தங்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று ஊழியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.19543029