நீர்கொழும்பு கடற்கரைப் பூங்காவில் குளிக்க வருவோர் தமது உயிர் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் – நீர்கொழும்பு உயிர் காப்பு பொலிஸ் பிரிவு

0
520

நீர்கொழும்பு  கடற்கரைப் பூங்கா (பீச் பார்க்) கடல் பகுதியில் குளிக்க வருவோர் தமது உயிர் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நீர்கொழும்பு உயிர் காப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உயிர் காப்பு பொலிஸ் பிரிவின்  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  மேலும் கூறியதாவது,

கடற்கரைப் பூங்காவுக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள்,  நீர்கொழும்பு நகர மக்கள், அயற் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் உள்நாட்டு பயணிகள் என பல நூற்றுக் கணக்கானோர் வருகைத் தருகின்றனர்.  வார இறுதி நாட்கள் போயா தினங்கள்;, பாடசாலை விடுமுறை நாட்களில் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையானோர் வருகைத் தருகின்றனர். இவர்களில் சிலர் கடலில் குளிக்கின்றனர். பாதுகாப்பு எல்லையை தாண்டி குளிக்கும் போது அல்லது மதுபோதையில் குளிக்கும் போது பாரிய அலைகளில் சிக்குண்டு பலர் உயிரிழந்துள்ளனர். கடலில் பந்து விளையாடி பந்தை எடுக்கச் செல்லும் போதும் சிலர் உயிரிழந்துள்ளனர். கடலில் கால் கழுவச் சென்றவர்களும் பாரிய அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.  இந்த கடற் பகுதியில் அபாயம் ஏற்படும் இடங்கள் உண்டு.  கடற் சுழியில் அகப்பட்டு பலர் இழந்துள்ளனர். கடற் சுழி இந்த கடற் பகுதியில் பல இடங்களில் உண்டு. அது இடம்மாறுவதுண்டு. இதனை ஆங்கிலத்தில் ‘கரன்ட்’ என்று கூறுவார்கள்.

எனவே  விநோதமாக  இருப்பதற்கு இங்கு வருவோர் தமது உயிர் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தினமொன்றில் ஒன்பது உயிர்களை இங்கு நாங்கள் காப்பாற்றினோம். இன்னொரு தினம் நான்கு உயிர்களை காப்பாற்றினோம். காப்பாற்ற முடியாமல் போன சம்பவங்களும் உண்டு. எமது எச்சரிக்கையை மீறி குளிக்கும் போது உயிரிழக்க வேண்டி ஏற்படுகிறது.

கடற்கரைப் பூங்கா பகுதியில் எச்சரிக்கைப் பலகைகள்  பல இடங்களில் அமைக்கப்பட வேண்டும். கடலில் குளிக்க முடியுமான  எல்லைப் பகுதியை குறிக்கும் வகையிலும் அதற்கு அப்பால் செல்லும்போது  பற்றிப்பிடிக்கும் வகையிலும்  நீண்ட தூரத்திற்கு கயிறுகள் கட்டப்பட வெண்டும் என்றார்.

நீர்கொழும்பு  கடற்கரைப் பூங்காவில்  அபாய எல்லையை குறிக்கும் பெயர் பலகைள் மற்றும்  சிவப்புக் கொடிகள்  பல இடங்களில் அமைக்கப்பட வேண்டும் உயிர் காப்பு வீரர்கள் தொடர்ச்சியாக பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இதற்கு நீர்கொழும்பு மாநகர சபை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் தொண்டு நிறுவனங்கள், அமைப்புக்கள் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று  நீர்கொழும்பு  கடற்கரைப் பூங்காவுக்கு வருகை தரும் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

unnamed (5)

unnamed (1)

unnamed (9)

unnamed (8)

unnamed (6)

 

 

 

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here