கட்டுநாயக்க விமான நிலைய வாடகை வாகன சேவை தொடர்பாக அமைச்சர் ஜோன் அமரதுங்கவுடன் முரண்பாடு: கட்டானை தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி ரோஸ் பெர்னாந்து இராஜினாமா

0
143

rose

 

கட்டு நாயக்க விமான நிலைய வாடகை வாகன சேவை தொடர்பாக அமைச்சர் ஜோன் அமரதுங்கவுடன் ஏற்பட்டுள்ள  முரண்பாடு காரணமாக தான் கட்சியில் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் விலகியுள்ளதாக  கட்டானை தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளர் மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஸ் பெர்னாந்து  தெரிவித்தார்.

கட்டானையில் அமைந்துள்ள அவரது பிரதான கட்சி காரியாலயத்தில் நேற்று (19) நடத்தப்பட்ட ஊடகவியலாளர்  மாநாட்டிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; கூறியதாவது,

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கட்டுநாயக்க விமான நிலைய  சுற்றுலா சாரதிகள் சங்கம் சுயாதீனமாக செயற்பட முடியாமல் அன்று பிரதி அமைச்சராக இருந்த சரத்குமார குணரத்ன பல்வேறு தலையீடுகளை செய்தார். தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க அதனை செய்கிறார்.

டென்டர் மூலமாக பெறப்பட்ட சட்ட ரீதியான வரையறையுடன் விமான நிலைய 101 ஆம் இலக்க கவுன்டர் மீண்டும் விமான நிலைய  சுற்றுலா சாரதிகள் சங்கத்திற்கு கிடைத்துள்ளது. சங்கத்தில்  உள்ள 135 சாரதிகளுடன் ஒப்பந்தம் செய்து வேலைகளை தொடர்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  ஒப்பந்த வேலைகளை செய்வதற்காக சுற்றுலா அனுமதிப் பத்திரம் அவசியமாகும். அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு அதிகாரத்தின் கீழ் உள்ள சுற்றுலா தொடர்பான அலுவலகத்தில் அதனை பெறுவதற்காக சென்றபோது அமைச்சரின்  ஆதரவாளர்கள் ஐந்துபேரை விமான நிலைய  சுற்றுலா சாரதிகள் சங்கத்திற்குள் உள்வாங்கி வழங்குமாறும் , அவரகளுக்கு சுற்றுலா அனுமதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்து விமான நிலையத்தில் சேவையில் ஈடுபட அனுமதிக்குமாறும்  அமைச்சரினால் வற்புறுத்தல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த விடயம் நிறு;தப்பட்டு 135 சாரதிகள் தொழில் செய்ய முடியாது  பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சி காலத்தில் நடந்ததைப் போன்று அல்லாமல்  இந்த நல்லாட்சியின் கீழ்  நீதியாக நடக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்யும் போது எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு வற்புறுத்துவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக நான் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்நிலையில் என்னால் கட்சியின் அமைப்பாளர் பணியை செய்வதை நான் புறக்கணிக்கிறேன்.  இது தொடர்பாக இனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவருக்கு அனுப்பியுள்ளேன் என்றார்.

rose1

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)