சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை மிக்க கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தமிழர்கள் அனைவரையும் புலி என குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அரச காணிகளை தங்களுக்கு வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் அரச காணி அத்து மீறலை தடுக்க நீ யார்? உன்னுடைய அப்பன் வீட்டுக்காணியா? அம்மா வீட்டுக்காணியா?
ஏன் சிங்கள மக்களுக்கு வழக்கு வைத்தாய்? நீயார் இவற்றைச்செய்ய? புலியா? தமிழர்கள் எல்லோரும் புலி என பட்டிப்பளை பிரதேச செயலாளரையும் அரச உத்தியோகத்தர்களையும் திட்டித்தீர்த்த சம்பவம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு எல்லைக்கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக அமைந்துள்ள மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவின் கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கால்நடைகளை மேய்க்கும் பொருட்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் காலம் காலமாக மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி போன்ற பிரதேசங்களை சேர்ந்த பல கால்நடையாளர்கள் தமது கால்நடைகளை காலம் காலமாக மேய்த்து வருகின்றனர்.
அந்த இடங்களை தமது பயிர்ச்செய்கைக்கு மீட்டுத்தருமாறு கோரி மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரர் தலைமையிலான 4 பிக்குமார் சேர்ந்து மக்களை ஒன்றித்து அம்பாறை கண்டி பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த பிரதேச செயலாளர் திருமதி தி.தெட்சணகௌரியின் தலைமையிலான உத்தியோகத்தர் குழுவினர் இந்த இடத்திற்கு சென்றனர்.
இதன் போது அரச காணிகளை அத்து மீறிப்பிடித்து பயிர்ச்செய்கையில் ஈடுபட விடுமாறும், அம்பாறை மாவட்டத்தில் தமது நிர்வாக சேவையினை பெற அனுமதிக்குமாறு கோரி கோசம் எழுப்பியவாறு, வீதியை மறித்ததினால் போக்குவரத்து தடைப்பட்டதையடுத்து பல தடவைகள் மங்களகம உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான உத்தியோகத்தர் குழுவினர் வீதியை பயன்படுத்த உதவுமாறு கோரியும் பலனளிக்கவில்லை.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரர் அவர்கள் அவதூறாக கெட்ட வார்த்தைகள் பேசி இந்த இடத்தில் நின்ற அரச உத்தியோகத்தர் (பிரதேச செயலக குழுவினரை) கேட்ட போதும் அந்த இடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனினும் மனம் தளராது கடமையுணர்வோடு நின்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமே நடைமுறைக்கு வரும் என எழுத்து மூலம் அறிவித்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆர்ப்பாட்டமானது கைவிடப்பட்டது.
www.tamilwin.com