நீர்கொழும்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை ‘மீபுர’ ஊடகக் குழு சென்று ஆராய்ந்து பார்த்தது. இந்த பாடசாலை 100 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இந்த பாடசாலை ஏராளமான கல்விமான்களை உருவாக்கியுள்ளதுடன் அவர்களுள் சிலர் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் அரச உத்தியோகங்களில் தொழில் புரிந்து வருகின்றனர். அத்துடன் இந்தப் பாடசாலையிலிருந்து மதத் தலைவர்களும் அமைச்சர் ஒருவரும் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கே கல்வி கற்றவர்களுள் மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்;து புள்ளேயும் ஒருவர் ஆவார். இவ்வாறு நாட்டிற்காக சேவை புரியும் பல நற்பிரஜைகளை உருவாக்கிய இந்தப் பாடசாலையை மூடுவதற்கு இடமளிப்பது சரியானதா?
நீர்கொழும்பு வலயத்தில் கட்டானை கோட்டக் கல்விக் காரியாலயத்தின் கீழ் இயங்கி வரும் இப்பாடசாலையில் தற்போது 50 ற்கும் குறைந்த மாணவர்களே கல்வி கற்று வருகின்றனர். பல குறைபாடுகளுடன் இன்று வரை இயங்கி வரும் இந்தப் பாடசாலையில் தொழில் புரியும் ஆசிரியர்கள் தரம் 1 தொடக்கம் தரம் 11 வரை கற்பித்து வருகின்றனர்.
இன்று வரை இந்தப் பாடசாலையில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்குரிய எந்தவொரு ஆசிரியரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துப் பாடங்களையும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களே கற்பிக்க வேண்டி நேர்ந்துள்ளது. பிரதான பாடங்களான கணிதம் மற்றும் விஞ்ஞானத்தையும் செயல்முறை சார்ந்த பாடங்களான உடற்கல்வி மற்றும் மனையியலையும் கற்பிப்பதற்கு எந்தவொரு ஆசிரியரும் இல்லை. 100 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமை வாய்ந்த பாடசாலைக் கட்டிடம் தற்போது பல இடிபாடுகளுடன் காணப்படுகிறது. இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புக்கள் மிகக் குறைவு. அத்துடன் கணனி அறிவை பெற்றுக் கொள்ளவோ அல்லது விளையாட்டு போன்ற இணைப்பாட விதானங்களை பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளவோ எந்தவொரு வசதி வாய்ப்பும் விளையாட்டு உபகரணங்களும் இல்லை. எனினும் அந்த மாணவர்கள் எல்லா தடைகளையும் தாண்டி விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி முன்னர் வெற்றி ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தப் பாடசாலைக்கு அதிபர் சேவையை சேர்ந்த தகுதி வாய்ந்த ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தப் பாடசாலையை முன்னேற்றமடையச் செய்ய சகலரதும் உதவிகளும் அவசியமாகும்.
பரோபகாரிகள், நலன் விரும்பிகள், சமூக சேவை அமைப்புக்கள், பழைய மாணவர்கள், பாடசாலை சமூகத்தினர்; மற்றும் தனிப்பட்டோர் இந்தப் பாடசாலைக்கு உதவிபுரிய வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.
தொடர்பு கொள்வதற்கு,
அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் /தொலைபேசி இலக்கம் – 0714392857