Saturday, June 20, 2026

வியர்வை கண்ணீர்

Must read

பிள்ளை கையில் அணிந்த
இறக்காத
இறப்பர் காப்புகள்,
பிள்ளை புத்தகம் சுமந்த
உக்காத பை,
காலில் அணிந்த
காலணி கூட,
உயிரற்றவை
புதைகுழிக்குள்
புதைக்கப்பட்டவர்களுக்கு
சாட்சியாக நிற்கின்றன.

திருவிழா காலங்களில்
பல நிறங்களில்
இறப்பர் காப்புகள் வாங்கி
அணிந்து அழகு பார்த்த
பிள்ளையின் கைகளில் இருந்து மண்ணுக்குள்
குழிதோண்டிப் புதைத்தாலும்
பிரிக்க முடியவில்லை.

புதைகுழிக்குள்ளே
மண்ணோடு
மண்ணாகப் போனாலும்
மீண்டும்
தோண்டப்படும் போது
பயன்படுத்திய
பொருட்கள் மட்டும்
காத்துக்கிடக்கிறது.

புதைகுழிக்குள்
போனவர்களின் உடல்கள் எலும்புக்கூடுகளாக வெளிக்கிளம்புகின்றன.

பிள்ளையின் கையை
அலங்கரித்த
இறப்பர் காப்புகள்
மட்டும்
அப்படியே தான் இருக்கின்றன.

பவுண் காப்பல்ல
இறப்பர் காப்புகள்,
மரண இறுதி நிமிடத்திலும்
பிள்ளைகளின்
கைகளில் இருந்து
பிரிய முடியவில்லை.

மூடி மறைக்க
இது முடிந்த கதையல்ல
இன்றும்
தேடித் திரிகிறார்கள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவுகள்.

பதில் சொல்லாத அரசு
கேள்வியுடன் வந்து நிற்கின்றன
மனிதப் புதைகுழிகள்.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article